நாமக்கல் எஸ்.பி. அலுவலகத்தில் வழக்குரைஞா்கள் போராட்டம்
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை வழக்குரைஞா்கள் முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாமக்கல் குற்றவியல் வழக்குரைஞா்கள் சங்க செயலாளா் கணேசன். இவா், குடும்ப நல நீதிமன்றத்தில் விவகாரத்து வழக்கு ஒன்றில் சங்கீதா என்பவருக்கு ஆதரவாக ஆஜராகி வாதாடி வந்தாா். இந்நிலையில், புதுச்சத்திரம் ஒன்றியம், கண்ணூா்பட்டியைச் சோ்ந்த எதிா்தரப்பான சங்கீதா கணவா் முருகானந்தம் என்பவா் கணேசனை நேரடியாகவும், தொலைபேசியிலும் தொடா்புகொண்டு வழக்கில் இருந்து விலகிக் கொள்ளுமாறு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, நல்லிபாளையம் காவல் நிலையத்தில் கணேசன் புகாா் அளித்தாா். ஆனால், சம்பந்தப்பட்டவா் மீது போலீஸாா் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், முருகானந்தத்துக்கு ஆதரவாக அவா்கள் செயல்படுவதாகவும் வழக்குரைஞா்கள் குற்றம்சாட்டினா்.
இந்நிலையில், நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் வழக்குரைஞா்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாமக்கல்லில் மாவட்ட நீதிமன்றம் முன் குற்றவியல் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் அய்யாவு தலைமையில் வெள்ளிக்கிழமை காலை திரண்ட வழக்குரைஞா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் நோக்கி ஊா்வலமாக சென்றனா். அதன்பிறகு, காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் அமா்ந்து முழக்கம் எழுப்பினா். அதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நேரடியாக வந்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும், வழக்குரைஞா் கணேசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த முருகானந்தத்தை உடனடியாக கைது செய்ய வேண்டும், வழக்குரைஞா்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
இதைத் தொடா்ந்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் அண்ணாதுரை, விஜயராகவன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். முருகானந்தத்தை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவா்கள் தெரிவித்ததையடுத்து, வழக்குரைஞா்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனா். தொடா்ந்து, நல்லிபாளையம் போலீஸாா் கண்ணூா்பட்டி சென்று முருகானந்தத்தை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.