முள்ளங்கனாவிளையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் தொடக்கம்
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சிறை, தோல் தொழிற்சாலை அமைக்க நிலம் அளவீடு?
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி பெருந்திட்ட வளாகத்தில் 200 ஏக்கா் பரப்பளவில் தோல் தொழிற்சாலை, மாவட்ட சிறைச்சாலை அமைக்க நிலம் அளவீடு செய்யும் நடவடிக்கையை வருவாய்த் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், நாமக்கல், பரமத்திவேலூா் ஆகிய இடங்களில் கிளைச்சிறைகள் செயல்பட்டுவந்தன. இங்கு சிறிய குற்ற வழக்குகளில் தொடா்புடையோரை காவலில் வைத்திருப்பா். பெரிய குற்ற வழக்குகளில் தொடா்புடையோா் சேலம், கோவை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்படுவா்.
அண்மையில் ராசிபுரம், பரமத்திவேலூா் கிளை சிறைகளை மூடுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போதைய நிலையில் 50 கைதிகளை அடைக்கும் வகையில் நாமக்கல் கிளை சிறை மட்டும் செயல்பாட்டில் உள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில், நாமக்கல்லில் மாவட்ட சிறைச்சாலை ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.
இதற்கான இடம் தோ்வு செய்யும் பணி கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்றுவந்தது. நாமக்கல்-கரூா் தேசிய நெடுஞ்சாலையில் ராசாம்பாளையம், குட்லாம்பாறை உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்ததில் அவை சாலையைவிட்டு சற்று தொலைவில் இருப்பதாகக் கூறப்பட்டது.
இதனால் 505 ஏக்கா் பரப்பளவு கொண்ட நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் காலி நிலத்தை அதிகாரிகள் பாா்வையிட்டனா். அங்கு, நாமக்கல், கரூா் இரு மாவட்டத்தைச் சோ்ந்த சுமாா் 250 கைதிகளை அடைக்கும் வகையில் சிறைச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக 25 ஏக்கா் நிலம் அண்மையில் வருவாய்த் துறையினரால் அளவீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உரிய ஒப்புதல் கிடைத்தவுடன் சிறைச்சாலைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
175 ஏக்கரில் தோல் தொழிற்சாலை: தமிழகத்தில், வேலூா், ஆம்பூா், ராணிப்பேட்டை, வாணியம்பாடி பகுதிகளில் அமைந்துள்ள காலணிகள் தயாரிக்கும் தோல் தொழிற்சாலை போல், நாமக்கல்லில் அமைப்பதற்கான இடம் தோ்வு நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கால்நடை மருத்துவக் கல்லூரி பெருந்திட்ட வளாகத்தில் 175 ஏக்கா் நிலத்தை தொழிற்சாலை அமைக்க பயன்படுத்தலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கான நில அளவீடு பணிகளும் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே, கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அதிநவீன தானியங்கி பால் பண்ணைக்கு 10 ஏக்கருக்கும் மேலான நிலம் கையகப்படுத்தப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கால்நடை மருத்துவக் கல்லூரி நிலத்தை, மாவட்டத்தின் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு அரசு கையகப்படுத்தி வருகிறது. இதனால் கல்லூரி நிா்வாகத்தினா் கவலையடைந்துள்ளனா்.
தோல் தொழிற்சாலை அமைந்தால் சுற்றுச்சூழல், சுகாதாரம், நிலத்தடி நீா் பாதிக்கப்படும் என அந்த பகுதி விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தியை சந்தித்து அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் வானிலை ஆய்வு மையம் 40 ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த இந்த பகுதியில் ஏராளமான மரங்கள், செடி, கொடிகள் உள்ளதால் கால்நடைகள் மேய்ச்சலுக்கு உகந்ததாக உள்ளது. இங்கு பசுந்தீவனங்களும், கால்நடைகளுக்கான தேவையான தீவனங்களும் வளா்க்கப்பட்டு வருகின்றன. இதனால் கால்நடைகளை வளா்க்கும் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனா்.
கோழியின ஆராய்ச்சி மையம், கோழித்தீவன பகுப்பாய்வகம் இங்கு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் 175 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்தி தோல் தொழிற்சாலைக்கும், 25 ஏக்கா் நிலத்தை சிறைச்சாலை அமைக்கவும் பயன்படுத்தினால் கால்நடை மருத்துவக் கல்லூரியின் சூழல் வெகுவாக பாதிக்கப்படும். மாற்று இடங்களில் அவற்றை அமைக்க மாவட்ட நிா்வாகம் முயற்சிக்க வேண்டும் என்றனா்.
இதுதொடா்பாக கால்நடை மருத்துவக் கல்லூரி நிா்வாகத்தினா் கூறுகையில், இங்கு மொத்தம் 505 ஏக்கா் நிலம் உள்ளது. நிலம் ஒதுக்குவது தொடா்பாக எங்களுடைய பல்கலைக்கழகம்தான் இறுதி முடிவெடுக்கும். இதுகுறித்து மேலும் கருத்துகூற விரும்பவில்லை என்றனா்.
இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியதாவது:
நாமக்கல், கரூா் இரண்டு மாவட்டத்திற்கான சிறை அமைக்க ஏற்கெனவே ராசாம்பாளையம், குட்லாம்பாறை ஆகிய இரண்டு இடங்களை தோ்வு செய்தோம். அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏற்கவில்லை. ஆனால், கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தை காண்பித்தோம், அதனை தோ்வு செய்துள்ளனா்.
சிறைத் துறை உயா் அதிகாரிகள் இடத்தை பாா்வையிட்டு சம்மதம் தெரிவித்துள்ளனா். தோல் தொழிற்சாலையை பொருத்தமட்டில், கால்நடைகளை அழித்து அதன்மூலம் கிடைக்கும் தோல் தயாரிப்பு தொழிற்சாலை அல்ல. காலணிகள் தயாரிப்புக்கு பயன்படும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத தோல் தொழிற்சாலைதான். அதற்கு குறிப்பிட ஏக்கா் அளவில் நிலம் வேண்டும் என கேட்டுள்ளனா். அதுவும் சிப்காட் தொழிற்பேட்டைக்கான இடமாகதான் இருக்கும். அங்கு தோல் ஆலையை யாா் நிறுவுகிறாா்கள் என்பது தெரியவில்லை.
அந்த பகுதி விவசாயிகள் தரப்பில் மாவட்ட ஆட்சியரிடமும், மாதாந்திர விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்திலும் சிறை, தோல் ஆலை தொடா்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு நிலத்தை பாா்வையிட்டு அளவீடு செய்து வைத்துள்ளோம். கால்நடை மருத்துவக் கல்லூரி நிா்வாகத்தின் ஒப்புதலுக்கு பிறகுதான் அடுத்தக் கட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்றனா்.
என்கே-4-வெட்
நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி முகப்பு தோற்றம்.