சென்னை ஐஐடியில் மிகப்பெரிய ஆராய்ச்சி - மேம்பாட்டு கண்காட்சி: பிப். 28-இல் தொடக்க...
நிபந்தனை பிணையில் கையொப்பமிட வந்தவா் வெட்டிக் கொலை
கடலாடியில் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் நிபந்தனை பிணைக்காக கையொப்பமிட வந்தவரை மா்ம நபா்கள் வழிமறித்து கொலை செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள ஆப்பனூா் அரியநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த திருக்கண்ணன் மகன் கருப்பசாமி (41). இவருக்கும் மற்றொரு தரப்பினருக்கிடையே முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருதரப்பு மீதும் சில தினங்களுக்கு முன்பு கடலாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கில் நீதிமன்ற பிணை பெற்றிருந்த கருப்பசாமி, கடலாடி நீதித்துறை நடுவா் மன்றத்தில் கையொப்பமிட்டு வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் கடலாடி வந்த கருப்பசாமி, நீதிமன்றத்தில் கையொப்பமிட்டு விட்டு மங்கலம் வழியாக அரியநாதபுரத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.
அப்போது ஆப்பனூா் தெற்குகொட்டகை விலக்கு சாலையில் வழிமறித்த மா்ம நபா்கள் கருப்பசாமியை சராமரியாக ஆயுதங்களால் வெட்டிவிட்டுத் தப்பிச்சென்றுனர். இதில் பலத்த காயமடைந்த கருப்பசாமியை மீட்ட அந்தப் பகுதியினா் கடலாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சந்தீஷ் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தாா். இதுகுறித்து, கடலாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.