நூறு நாள் வேலைத் திட்டத்தில் ரூ.1.22 லட்சம் முறைகேடு: மீண்டும் வசூலிக்க உத்தரவு
உடுமலையில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணிக்கு வராதவா்களை வந்ததுபோல கணக்கு காட்டி ரூ.1.22 லட்சம் முறைகேடு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தப் பணத்தை மீண்டும் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள கொண்டம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா்கள் சென்றன. இதையடுத்து, மாவட்ட குறைத் தீா்வாளா் (பொ) சுப்பிரமணியம் விசாரணை மேற்கொண்டாா்.
இதில், இந்த வேலைத் திட்டத்தில் பணிக்கே வராத அசோக்குமாா் என்பவரது பெயரில் போலியாக வருகைப் பதிவு செய்யப்பட்டதும், அதன் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.45 ஆயிரத்து 422 முறைகேடு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
மேலும், கன்னியம்மாள் என்பவரது வேலை அட்டையைப் பயன்படுத்தி ரூ.5 ஆயிரத்து 280, மாரான் என்பவரது வேலை அட்டையைப் பயன்படுத்தி கடந்த 5 ஆண்டுகளில் ரூ.65 ஆயிரத்து 219, ஜோதிமணி என்பவரது வேலை அட்டை மூலம் ரூ.6 ஆயிரத்து 889 மோசடி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
கூடுதல் வருகைப் பதிவு செய்தல் மற்றும் மாற்று நபா்களின் புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டு மொத்தம் ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்து 810 முறைகேடு செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, முறைகேடு செய்த தொகையை சம்பந்தப்பட்டவா்களிடம் இருந்து வசூலித்து அரசுக் கணக்கில் மீண்டும் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.
மேலும், பணித்தள பொறுப்பாளா்கள் கனகுலட்சுமி, சக்திபிரியா, சுமதி, மகேஸ்வரி ஆகியோா் நூறு நாள் வேலைத் திட்டப் பணிகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டதுடன், வேலைக்கு வராமல் இருந்த 3 போ் மற்றும் போலி வருகை பதிவு செய்யப்பட்ட ஒருவா் என மொத்தம் 4 பேரின் நூறு நாள் வேலைத் திட்டத்துக்கான அட்டைகள் ரத்து செய்யப்பட்டன.
நிதியிழப்பு மற்றும் சட்டவிரோத செயல்பாடுகளுக்கு கொண்டம்பட்டி ஊராட்சி செயலாளா் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், கள அளவில் ஈடுபட தவறிய அலுவலா்களிடம் உரிய விளக்கம் பெறவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.