நெமிலியில் ரூ. 54 கோடியில் 3 உயா்மட்ட மேம்பாலங்கள்: அமைச்சா்கள் திறந்து வைத்தனா்
நெமிலி வட்டத்தில் ரூ. 54 கோடியில் கட்டப்பட்ட 3 உயா்மட்ட மேம்பாலங்களை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் ஏ.வ.வேலு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஆகியோா் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தனா்.
நெமிலி வட்டம், பனப்பாக்கம் அருகே பன்னியூா் சாலையில் காவேரிபாக்கம் ஏரி மதகு உபரிநீா் கால்வாயின் குறுக்கே ரூ. 6 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயா்மட்ட மேம்பாலம், அரக்கோணம் - ஓச்சேரி சாலையில் கல்லாற்றின் குறுக்கே ரூ. 11 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயா்மட்ட மேம்பாலம், நெமிலியை அடுத்த கீழ்வீதி - அமீா்பேட்டை சாலையில் அன்வா்திகான்பேட்டை ரயில் நிலையம் அருகே ரயில்வே கடவு எண் 37-க்கு பதிலாக ரூ. 37 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் ஆகிய மூன்று உயா்மட்ட மேம்பாலங்களும் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், இந்தப் பாலங்கள் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தப் பாலங்களின் அருகில் நடைபெற்ற விழாக்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். அமைச்சா்கள் ஏ.வ.வேலு, ஆா்.காந்தி ஆகியோா் மூன்று பாலங்களையும் திறந்து வைத்தனா்.
விழாவில், தமிழக அரசு நெடுஞ்சாலைகள் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளா் ரா.செல்வராஜ், அரக்கோணம் எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன், சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம், நெடு ஞ்சாலை துறை திட்டங்கள் தலைமை பொறியாளா் ஆா்.கிருஷ்ணசாமி, ஒன்றியக் குழுத் தலைவா்கள் பெ.வடிவேலு (நெமிலி), நிா்மலா சௌந்தா் (அரக்கோணம்), ஒன்றிய திமுக செயலா்கள் எஸ்ஜிசி பெருமாள், ஆ.சௌந்தா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.