தமிழ்நாட்டில் பரவுவது புதிய வகை வைரஸ் தொற்று இல்லை: சுகாதாரத் துறை
சிவன் சம்பா நெல் விதைகளை மானிய விலையில் பெற்றுக் கொள்ள அழைப்பு
மருத்துவ குணம் கொண்ட சிவன் சம்பா நெல் விதைகளை மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம் என ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகளுக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா அழைப்பு விடுத்துள்ளாா்.
இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு,மருத்துவ குணம் கொண்ட சிவன் சம்பா ரக நெல் விதைகள், மானிய விலையில் வேளாண்மைத் துறை சாா்பில் விற்பனை செய்யப்படுகிறது. வேளாண்மைத் துறையில் ‘மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டத்தில், மருத்துவ குணம் கொண்ட சிவன் சம்பா நெல் ரகம் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு, 2,000 கிலோ அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, விநியோகம் செய்யப்பட உள்ளது. சிவன் சம்பா பருவத்துக்கேற்ப 130 முதல் 140 நாள்கள் வயதுடைய நெற்பயிா் ஆகும்.
ஏக்கருக்கு 1,200 முதல் 1,500 கிலோ மகசூல் தரவல்லது. சிவன் சம்பா ரகத்தில் இரும்பு மற்றும் துத்தநாக சத்து அதிகமாக இருப்பதால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. அதிக அளவில் மருத்துவ குணங்கள் உடைய பாரம்பரிய நெல் ரகங்களின் உற்பத்தியை அதிகப்படுத்த விதை விநியோகத்துக்கு 50 சதவீதம் மானிய விலையில் கிலோவுக்கு ரூ. 35 என்ற விலையில் கிடைக்கும்.
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியில் முன்பதிவு செய்து பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.