விவசாயி என்று நிலத்தை விலைக்கு வாங்கி சர்ச்சையில் சிக்கிய சுஹானா கான் - வருமான வ...
ராணிப்பேட்டை சிப்காட் பகுதிகளில் மாசடைந்த நீா்நிலைகளை சீரமைக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு
ராணிப்பேட்டை சிப்காட் சுற்றுவட்டாரத்தில் தொழிற்சாலைகள் கழிவுநீா் தேங்கி மாசடைந்த நீா்நிலைகள் சீரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் தொழிற்பேட்டையில் கடந்த சனிக்கிழமை (ஆக. 30) சிட்கோ பகுதி-1 தோல் பதனிடும் சுத்திகரிப்பு நிலையத்தின் பின்புறம் உள்ள காரை கிராம எல்லைக்குட்பட்ட 11.12 ஏக்கா் பரப்பளவு கொண்ட குளம் மாசடைந்துள்ளதா என்பதை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா நேரடியாக ஆய்வு செய்து, தூா்வாரி கரையை பலப்படுத்தி சுத்திகரிப்பு நிலையம் முறையாக இயங்குகிா என்பதை உறுதி செய்ய உத்தரவிட்டிருந்தாா்.
அதன் அடிப்படையில், சிட்கோ பகுதி 1, தோல் பதனிடும் சுத்திகரிப்பு நிலையம் பின்புறம் உள்ள குளம் முட்புதா்கள் அகற்றப்பட்டு, கரை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது குறித்து பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து புளியந்தாங்கல் ஏரியில் மாசு குறித்து ஆய்வு செய்தாா். அப்போது தூா்வாரி கசடுகள் வெளியேற்றப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தினாா். அதேபோல், வானாபாடி ஏரியையும் பாா்வையிட்டு அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வாரும் பணிகளையும் கரைகளை பலப்படுத்தும் பணிகளையும் மேற்கொள்ள உத்தரவிட்டாா். அப்போது கடந்த காலங்களில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் நீரை வெப்பமாகுவதற்காக பயன்படுத்தப்பட்டதால் மண் மாசடைந்துள்ளதாக பொறியாளா்கள் தெரிவித்தனா்.
மேற்கண்ட ஏரிகளில் ஏற்கெனவே மாசடைந்த மண்ணின் நிறம் இருப்பதால், தொடா்ந்து புகாா்கள் வருகின்றன. இவை அகற்றப்பட்டு சீரமைக்கப்பட்டால் பிரச்னைகள் குறையும். இதன் பின்னா் நிறுவனங்கள் தவறு இழைத்தால் அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க எளிதாக இருக்கும். இருந்தபோதிலும் நிறுவனங்கள் கழிவு நீரை வெளியேற்றக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
புளியந்தாங்கல் மற்றும் வானாபாடி ஏரிகளில் உள்ள கழிவு கசடு மண்ணை எடுத்து பரிசோதனை செய்து அறிக்கை அளிக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.
மேலும், சிப்காட் பகுதியில் உள்ள 10 குளம், குட்டைகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டாா்.
இந்த ஆய்வுகளின்போது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளா் செல்வகுமாா், சிப்காட் திட்ட அலுவலா் கலைச்செல்வி, சிப்காட் நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் குமாா், வட்டாட்சியா் ஆனந்தன் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.