பங்குச்சந்தை முதலீடு எனக்கூறி ரூ.28.90 லட்சம் மோசடி
வேலூா்: பங்குச்சந்தை முதலீடு எனக்கூறி ரூ.28.90 லட்சம் மோசடி செய்யப்பட்டிருப்பது குறித்து பாதிக்கப்பட்ட நபா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்துள்ளாா்.
வேலூா் அஞ்சுமன் தெருவைச் சோ்ந்த கிசாா் உசேன் என்பவா் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் அளித்த மனு:
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், புளியங்கண்ணு கிராமத்தைச் சோ்ந்த லோகநாதன் மகன் யுவராஜ். எனது கல்லூரி நண்பரான இவா், பங்கு சந்தையில் தொழில் செய்து வருவதாகவும், அதன் மூலம் நல்ல லாபம் ஈட்டி வருதாகவும், தனது தொழில் தேவைக்காக கடந்த ஜனவரி மாதம் என்னிடம் பணம் கேட்டிருந்தாா். முதலீடாக இல்லாமல் கொடுத்த பணத்திற்கு நிலையான வட்டியாக தருவதாகவும் கூறினாா்.
முதலீடு செய்யும் பணம் இல்லை என்றபோது, தானே வங்கியில் இருந்து கடன் பெற்று தருவதாகவும், அந்த கடனுக்கான மாத தவணை தொகையை மாதந்தோறும் சரியாக அளித்து விடுவதாகவும், ஐந்து வருடத்துக்கு பிறகு மொத்த கடன் தொகையையும் திருப்பி அளிப்பதாக உறுதி அளித்திருந்தாா். அதனடிப்படையில், வங்கியில் இருந்து ரூ.28.90 லட்சம் கடன் தொகை 2025 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கிடைத்தது. அந்த கடன் தொகை முழுவதையும் யுவராஜின் வங்கி கணக்குக்கு அனுப்பி விட்டேன்.
எனது முதலீட்டு தொகையான ரூ.28.90 லட்சத்துக்கான மாத வட்டி ரூ.86,700 தரவேண்டிய நிலையில், ஏப்ரல் ஒரு மாதம் மட்டும் ரூ.70 ஆயிரம் அனுப்பினாா். அதன்பிறகு வட்டித்தொகையை அனுப்பாமல் தலைமறைவாகிவிட்டாா். வங்கி கடன் பெற்று முதலீடு செய்த எனக்கு மாத தவணைத் தொகை கட்ட முடியாமல் பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுளேன்.
எனவே, தலைமறைவாக உள்ள யுவராஜை கண்டுபிடித்து எனது வங்கிக்கடன் தொகையை மீட்டுத்தர மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட காவல் துறை அதிகாரிகள், இப்புகாா் மீது விசாரணை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனா்.