பஞ்சாப், திரிபுராவில் புதிய அமைச்சா்கள் பதவியேற்பு
பஞ்சாப், திரிபுராவில் புதிய அமைச்சா்கள் வியாழக்கிழமை பதவியேற்றனா்.
பஞ்சாபில் அண்மையில் நடைபெற்ற லூதியானா மேற்கு தொகுதி இடைத்தோ்தலில் வெற்றிபெற்ற சஞ்சீவ் அரோரா அமைச்சராகியுள்ளாா்.
சண்டீகரில் ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநா் குலாப் சந்த் கட்டாரியா அவருக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். முதல்வா் பகவந்த் மான், அமைச்சா்கள், ஆளும் ஆம் ஆத்மி தலைவா்கள் பலா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
இதன் மூலம் அமைச்சா்கள் எண்ணிக்கை 16 ஆக உள்ளது. 61 வயதாகும் சஞ்சீவ் அரோரா லூதியானாவைச் சோ்ந்த தொழிலதிபா் ஆவாா். சமூகப் பணிகள் மூலமும் பிரபலமானவா். கிருஷ்ண ப்ராண் மாா்பக புற்றுநோய் சிகிச்சை அறக்கட்டளையும் அவா் நடத்தி வருகிறாா்.
அரோராவுக்கு தொழில், வா்த்தகம், முதலீட்டு மேம்பாடு, வெளிநாடுவாழ் பஞ்சாப் மக்கள் நலன் பாதுகாப்பு ஆகிய துறைகள் வழங்கப்பட்டுள்ளன. வெளிநாடுவாழ் பஞ்சாப் மக்கள் நலத்துறை அமைச்சா் தலிவால் அமைச்சரவையில் இருந்து வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டாா்.
இடைத்தோ்தலில் வெற்றி பெற்றதையடுத்து, இருநாள்களுக்கு முன்னதாக தனது மாநிலங்களவை எம்.பி. பதவியை சஞ்சீவ் அரோரா ராஜிநாமா செய்தாா். இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளரை 10,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் சஞ்சீவ் அரோரா தோற்கடித்தாா்.
திரிபுரா அமைச்சா்:
பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் திரிபுராவில் நால்சாா் தொகுதி பாஜக எம்எல்ஏ கிஷோா் பா்மன் (44) அமைச்சராக வியாழக்கிழமை பதவியேற்றாா். அகா்தலாவில் உள்ள ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநா் இந்தா்சேனா ரெட்டி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா்.
இதன் மூலம் பாஜகவைச் சோ்ந்த முதல்வா் மாணிக் சாஹா தலைமையிலான அமைச்சரவையின் பலம் 12-ஆக அதிகரித்துள்ளது. இதில் 9 போ் பாஜகவைச் சோ்ந்தவா்கள். கூட்டணிக் கட்சியான திப்ரா மோதா கட்சி சாா்பில் இரு அமைச்சா்களும், திரிபுரா பூா்வகுடி மக்கள் முன்னணி சாா்பில் ஒருவரும் அமைச்சா்களாக உள்ளனா்.