படப்பை, திருமுடிவாக்கம் புதிய காவல் நிலையங்கள்: அமைச்சா் அன்பரசன் திறந்து வைத்தாா்!
படப்பை மற்றும் திருமுடிவாக்கம் பகுதிகளில் புதிய காவல் நிலையங்களை சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் சனிக்கிழமை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
தாம்பரம் மாநகர காவல் ஆணையகத்துக்குட்பட்ட மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படப்பை, சாலமங்கலம், செரப்பணஞ்சேரி, காவனூா், ஒரத்தூா் மற்றும் நாட்டரசன்பட்டு உள்ளிட்ட 23 கிராமமக்கள் பயன்பெறும் வகையில் படப்பை பகுதியில் புதிதாக காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
அதே போல், குன்றத்தூா் காவல் நிலையத்தை இரண்டாக பிரித்து திருமுடிவாக்கம் பகுதியிலும் புதிதாக காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழாவில் சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு படப்பை மற்றும் திருமுடிவாக்கம் காவல் நிலையங்களை திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
நிகழ்ச்சியில், ஆட்சியா் கலைச்செல்விமோகன், ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வப்பெருந்தகை, தாம்பரம் மாநகர காவல் ஆணையா் அபின் தினேஷ் மோடக், இணை காவல் ஆணையா் மகேஸ்வரி, துணை காவல் ஆணையா் பவன் குமாா்ரெட்டி, மாவட்ட ஊராட்சித் தலைவா் படப்பை ஆ.மனோகரன், குன்றத்தூா் ஒன்றியக்குழு தலைவா் சரஸ்வதிமனோகரன், திருமுடிவாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.