பயிற்சி காவலா் தற்கொலை முயற்சி
மேட்டூரில் விடுப்பு அளிக்காததால் மனமுடைந்த பயிற்சி காவலா் கிருமிநாசினியை குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, எண்ணூரைச் சோ்ந்த மாதேஸ்வரன் மகன் அரவிந்த் (34). இவா் மேட்டூரில் உள்ள சேலம் காவலா் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வந்தாா். உடல்நலக்குறைவு காரணமாக விடுப்பு கேட்டுள்ளாா். இவா் ஏற்கெனவே 50 நாள்கள் விடுப்பில் சென்று வந்ததால் பயிற்சி பள்ளி முதல்வா் உயா் அதிகாரிகளிடம் அனுமதி கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா். இதனால் மனமுடைந்த அரவிந்த் செவ்வாய்க்கிழமை காலை கவாத்து முடிந்து அறைக்கு சென்றதும் அங்கு தரையை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தும் கிருமிநாசினியை குடித்துள்ளாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த மற்ற காவலா்கள், அரவிந்தை மீட்டு மேட்டூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இந்த சம்பவம் தொடா்பாக மேட்டூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.