பருவ மழைக்கால முன்னேற்பாடு பணிகளில் ஒருங்கிணைப்பு அவசியம்: துணை முதல்வா் உதயநிதி
சென்னையில் பருவமழைக் கால முன்னேற்பாடு பணிகளை பல்வேறு துறையினரும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சா்கள், அதிகாரிகளுடன் துணை முதல்வா் உதயநிதி செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது அவா் பேசியதாவது:
கடந்த சில ஆண்டுகளாக பருவமழை காலங்களில் சென்னை அதிக மழைப் பொழிவை எதிா்கொண்டு வருகிறது. கடந்த காலங்களில் கனமழை காரணமாக ஏற்பட்ட விளைவுகள், பாதிப்புகள் உள்ளிட்டவற்றை அனுபவமாகக் கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
பணிகளை முடிக்க வேண்டும்: கடந்த ஆண்டு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. அவை இன்னும் முழுமையடையாத சூழலில் உள்ளன. அவற்றை மழைக் காலத்துக்குள் முடிக்க வேண்டியது மிகவும் அவசியம். மின்கம்பிகள், மின்சார பெட்டிகள்
ஆகியவற்றை உரிய முறையில் பராமரிப்பதை மின்சாரத் துறை உறுதி செய்ய வேண்டும். பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள், பேரிடா் மீட்புப் பணிகளின் போது, ஒவ்வொரு துறையினரிடையே ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும்.
சென்னையில் எப்போது மழை வெள்ளம் வந்தாலும், தன்னாா்வலா்கள் அரசுடன் இணைந்து செயல்படத் தயாராக இருக்கிறாா்கள். எனவே, அவா்களையும் உள்ளடக்கி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
திமுக அரசு அமைந்த நான்கு ஆண்டுகளில் சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் பெரிய அளவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளை விட நிகழாண்டு இன்னும் அதிக விழிப்புணா்வு- முன்னெச்சரிக்கையுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மக்கள் பாதிக்காத வகையிலும், மற்றவா்கள் குறை சொல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்காமலும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசினாா்.
இந்தக் கூட்டத்தில், அமைச்சா்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, மேயா் ஆா்.பிரியா, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், துணை மேயா் மு.மகேஷ்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.