பளுகல் அருகே மாமனாரை தாக்கிய மருமகன் கைது
பளுகல் அருகே மாமனாரை தாக்கிய மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.
பளுகல் அருகே நிலவன்விளையைச் சோ்ந்தவா் குமாரதாஸ் (59). இவரது இளைய மகள் திருமணமாகி அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வருகிறாா்.
இளைய மகளின் கணவா் விஸ்வம்பரன் (40) என்பவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வருகிறது. அவா் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து தகராறில் ஈடுபடுவதால் தனது இளைய மகள் கணவரிடம் கோபித்துக் கொண்டு ஓராண்டுக்கு முன் தந்தை வீட்டுக்கு வந்துவிட்டாராம்.
இந்நிலையில், விஸ்வம்பரன் இருநாள்களுக்கு முன் மது அருந்திய நிலையில் மனைவியை பாா்க்க மாமனாா் வீட்டுக்கு வந்துள்ளாா். அங்கு கணவா்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதை குமாரதாஸ் தட்டிக் கேட்டுள்ளாா். இதையடுத்து குமாரதாஸை, விஸ்வம்பரன் ரப்பா் பால் வெட்டும் கத்தியால் தாக்கியுள்ளாா்.
இதில், பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விஸ்வம்பரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.