3 ஆண்டுகளில்... வங்கிகளில் உரிமைகோரப்படாத வைப்புத்தொகை ரூ. 52,174 கோடி!
பஹல்காம் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்! அமித் ஷா
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் தாக்குதல் குறித்து திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு விவாதம் தொடங்கியது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் விளக்கத்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக அவையின் உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கேற்று பேசி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கை மூலம் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தால் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதாக அமித் ஷா மக்களவையில் தெரிவித்துள்ளார்.
அமித் ஷா பேசியதாவது:
”அப்பாவி மக்கள் தங்கள் குடும்பத்தினர் முன்னிலையில், அவர்களின் மதத்தின் அடிப்படையில் கொல்லப்பட்டனர். இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை நான் கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை இணைந்து மேற்கொண்ட 'ஆபரேஷன் மகாதேவ்' என்ற கூட்டு நடவடிக்கை நேற்று நடைபெற்றது. இதில், சுலைமான், எலியாஸ் மற்றும் ஜிப்ரான் ஆகிய பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள்.
பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட சுலைமானும் கொல்லப்பட்டுள்ளார். இவர்கள் மூவரும் லஷ்கர் -ஏ- தொய்பா உள்ளிட்ட பல்வேறு அமைப்பில் இருந்தவர்கள். பயங்கரவாதிகள் பயன்படுத்திய ஒரு எம் 9, இரண்டு ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த அவை மற்றும் நாட்டு மக்கள் சார்பாக இந்திய ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறைக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.