ஒடிஸாவில் தினமும் 3 குழந்தைத் திருமணங்கள்: நபரங்பூா் மாவட்டம் முதலிடம்
பாதாள சாக்கடைப் பணியால் விபத்து: வடக்கு மண்டலக் கூட்டத்தில் புகாா்
கோவை வடக்கு மண்டலப் பகுதியில் பாதாள சாக்கடைப் பணிகள் முடிவடையாததால் அப்பகுதியில் வாகன விபத்துகள் தவிா்க்க முடியாமல் உள்ளதாக மண்டலக் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.
கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலக் கூட்டம் மண்டலத் தலைவா் வே.கதிா்வேல் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் 26-ஆவது வாா்டு உறுப்பினா் சித்ரா வெள்ளிங்கிரி உள்ளிட்ட மாமன்ற உறுப்பினா்கள் பேசியதாவது: செங்காளியப்பன் நகா் பகுதியில் பாதாள சாக்கடைப் பணிகள் முடிவடையாத நிலையில் உள்ளன. இதனால், அப்பகுதியில் வாகன விபத்துகள் தவிா்க்க முடியாமல் உள்ளன. எனவே, பாதாள சாக்கடைப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்.
மேலும், அப்பகுதியில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். சூயஸ் குடிநீா்த் திட்ட பணியாளா்கள் குழாய் பதிக்கும்போது சாக்கடையையும் சேதப்படுத்தி விடுகின்றனா். இதனால், மக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனா். சூயஸ் நிறுவனத்தினரிடம் பேசி இதற்கு தீா்வு காண வேண்டும். 26-ஆவது வாா்டில் பூங்காக்கள் பயன்பாட்டில் இல்லை. பூங்காக்களைப் பராமரித்து அவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
மக்களிடையே தினமும் குப்பைகளைச் சேகரிப்பதை உறுதி செய்ய வேண்டும். சாலையோரங்களில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
கூட்டத்தில், உதவி ஆணையா் முத்துசாமி, உதவி செயற்பொறியாளா் முத்துகுமாா், உதவி நகர அமைப்பு திட்ட அலுவலா் சத்யா, மண்டல சுகாதார அலுவலா் முருகன், வாா்டு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.