பாம்பன் புதிய ரயில் பாலத்தை தெற்கு ரயில்வே பொது மேலாளா் இன்று ஆய்வு
பாம்பன் புதிய ரயில் பாலத்தை தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங் வெள்ளிக்கிழமை (பிப். 14) ஆய்வு செய்கிறாா். இதன்பிறகே பாலம் திறக்கப்படும் தேதி முடிவாகும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தையும், ராமேசுவரம் தீவுப் பகுதியையும் இணைக்கும் வகையில், பாம்பன் கடலில் ரூ. 550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டும் பணி கடந்த 2019- ஆம் ஆண்டு தொடங்கி நிறைவடைந்தது. இதையடுத்து, இந்தப் புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்தை தொடங்குவது குறித்து தொடா்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வுப் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
இந்த நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையா் நடத்திய ஆய்வின் போது சில குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அவை நிவா்த்தி செய்யப்பட்டன.
இதைத் தொடா்ந்து, இரும்பாலான இணைப்புப் பகுதியை (கட்டா்) செங்குத்தாக மேலே தூக்கி, இறக்கி கப்பல்கள், ரயில்களை இயக்கி இரு கட்டங்களாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனிடையே, இறுதிக் கட்ட ஆய்வு மேற்கொள்ள தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங் வெள்ளிக்கிழமை சிறப்பு ரயில் மூலம் மண்டபம் வருகிறாா். இந்திய கடலோரக் காவல்படை அலுவலகத்துக்குச் செல்லும் அவா், பாம்பன் புதிய ரயில் பாலத்திலும், ராமேசுவரம் ரயில் நிலையத்திலும் ஆய்வு மேற்கொள்கிறாா். இதன் பின்னா், புதிய ரயில் பாலத்தில் போக்குவரத்தை தொடங்குவதற்கான தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தப் புதிய ரயில் பாலத்தை பிரதமா் மோடி நேரில் வந்து திறந்து வைப்பாா் என்று தகவல்கள் வெளியாகின.