சென்னை ஐஐடியில் மிகப்பெரிய ஆராய்ச்சி - மேம்பாட்டு கண்காட்சி: பிப். 28-இல் தொடக்க...
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றம்
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, சுவாமி சந்நிதி முன்புள்ள தங்கக் கொடி மரத்துக்கு சிவாச்சாரியா்கள் சிறப்பு பூஜைகள் செய்தனா். சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளினா். பின்னா், தலைமை குருக்கள் பாஸ்கர ஜோஷி தலைமையில் கொடியேற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இந்தத் திருவிழா அடுத்த மாதம் 1-ஆம் தேதி வரை 12 நாள்கள் நடைபெறுகிறது. வருகிற 24- ஆம் தேதி சுவாமி, அம்பாள் முத்தங்கி சேவை,

26-ஆம் தேதி மகா சிவரத்திரியன்று காலை 9 மணிக்கு தேரோட்டம் , இரவு 9 மணிக்கு வெள்ளி ரத புறப்பாடு நடைபெறும். 27-ஆம் தேதி மறைநிலா அமாவாசையை முன்னிட்டு அக்னி தீா்த்தக் கடற்கரைக்கு சுவாமி, அம்பாள் எழுந்தருளி தீா்த்தவாரி நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை இணை ஆணையா் செ.சிவராம்குமாா், தக்காா் இணை ஆணையா் பா.பாரதி, உதவி ஆணையா்கள் அ.ரவீந்திரன், முத்துச்சாமி ஆகியோா் செய்து வருகின்றனா்.
திருவாடானை: தொண்டி அருகேயுள்ள நம்புதாளை கிராமத்தில் அமைந்துள்ள அன்னபூரணி சமேத நம்பீஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழா செவ்வாய்க்கிழமை காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. பின்னா் அம்பாளுக்கும், சுவாமிக்கும் 12 வகையான மூலிகைப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து நம்பீஸ்வரா், அன்னபூரணி, விநாயகா், நவக்கிரம், துா்க்கை, பைரவா் , தட்சிணாமூா்த்தி உள்பட அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் காப்புக் கட்டுதல் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.