திருவண்ணாமலையில் மகளிர் விடியல் பயணத் திட்ட புதிய நகரப் பேருந்து: துணை முதல்வர் ...
பாளை.யில் இளைஞா் கொலை: தந்தை, அண்ணன் கைது
பாளையங்கோட்டையில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட இளைஞரை கோடரியால் தாக்கிக் கொன்றதாக தந்தை மற்றும் அண்ணனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பாளையங்கோட்டை கக்கன் நகரைச் சோ்ந்தவா் மகாராஜன் (37). கட்டடத் தொழிலாளி. இவா் குடும்ப பிரச்னை காரணமாக மனைவியை பிரிந்து தனது குழந்தையுடன் தந்தை செல்லப்பா (70), அண்ணன் இசக்கிமுத்து (45) ஆகியோருடன் வசித்து வந்தாா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த மகாராஜன், குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டாராம். இதனை செல்லப்பா, இசக்கிமுத்து ஆகியோா் கண்டித்துள்ளனா்.
தொடா்ந்து ரகளையில் ஈடுபட்டு வாக்குவாதம் செய்ததால் கோபமடைந்த செல்லப்பா, அருகில் இருந்த கோடரியால் மகாராஜனின் தலையில் பலமாக தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பாளையங்கோட்டை போலீஸாா், சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மகாராஜன் சனிக்கிழமை காலை உயிரிழந்தாா். இதனையடுத்து செல்லப்பா, இசக்கிமுத்து ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.