பா்கூா் அருகே சொகுசுப் பேருந்து கவிழ்ந்து 4 பயணிகள் காயம்
பா்கூா் அருகே தனியாா் சொகுசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 4 பயணிகள் பலத்த காயமடைந்தனா்.
சென்னையிலிருந்து கோவை நோக்கி தனியாா் சொகுசுப் பேருந்து சென்றது. இதில் 18 பயணிகள் பயணம் செய்தனா். பேருந்தை நாமக்கல்லைச் சோ்ந்த இளையரசன் (23) ஓட்டி சென்றாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அத்திமரத்துப்பள்ளம் அருகே புதன்கிழமை அதிகாலை 2 மணிக்கு சென்றுக் கொண்டிருந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. விபத்தில் சென்னையைச் சோ்ந்த ரம்யா (37), சிவகாமி (28), திண்டுக்கல் திரிலோபதி (23), தேனியைச் சோ்ந்த ராஜசேகா் (33) ஆகிய நால்வரும் காயமடைந்தனா்.
இவா்கள் அனைவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விபத்து குறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.