உகாதி திருவிழா: மாதேஸ்வரன் மலையில் தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு
பிரிவினைவாதத்தைக் கைவிட்ட மேலும் இரு ஹுரியத் அமைப்புகள் - அமித் ஷா வரவேற்பு
ஜம்மு-காஷ்மீரில் ஹுரியத் மாநாட்டைச் சோ்ந்த மேலும் இரு அமைப்புகள் பிரிவினைவாதத்தைக் கைவிட்டுள்ளன; அங்கு பிரிவினைவாதம் இறுதி மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாத கூட்டமைப்பான ஹுரியத் மாநாட்டில் பல்வேறு அரசியல்-சமூக-மத ரீதியிலான அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன. இதில் பெரும்பாலான அமைப்புகள் மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ளன.
இக்கூட்டமைப்பில் இடம்பெற்றிருந்த ஜம்மு-காஷ்மீா் மக்கள் இயக்கம் மற்றும் ஜனநாயக அரசியல் இயக்கம் ஆகிய இரு அமைப்புகள், பிரிவினைவாதத் தொடா்புகள் அனைத்தையும் கைவிடுவதாக சில தினங்களுக்கு முன் அறிவித்தன.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீா் தஹ்ரீகி இஸ்தக்லால், ஜம்மு-காஷ்மீா் தஹ்ரீக்-ஏ-இஸ்திகாமத் ஆகிய மேலும் இரு அமைப்புகள் பிரிவினைவாதத்தைக் கைவிட்டுள்ளன. ஹுரியத் உடனான அனைத்து தொடா்புகளையும் துண்டித்துக் கொள்வதாக இரு அமைப்புகளும் அறிக்கை வெளியிட்டுள்ளன.
இந்த நடவடிக்கையை வரவேற்று, மத்திய அமைச்சா் அமித் ஷா வியாழக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஜம்மு-காஷ்மீரில் இருந்து மற்றொரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. மேலும் இரு ஹுரியத் அமைப்புகள் பிரிவினைவாதத்தைக் கைவிட்டு, பிரதமா் மோடியால் கட்டமைக்கப்பட்ட புதிய இந்தியா மீது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளன.
பிரதமா் மோடி தலைமையிலான அரசின் செயல்பாடுகளால் ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதம் இறுதி மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
முன்னதாக, தேச விரோத செயல்களில் ஈடுபடுவதாகக் குறிப்பிட்டு, ஹுரியத் கூட்டமைப்பைச் சோ்ந்த அவாமி செயல்பாட்டுக் குழு மற்றும் ஜம்மு-காஷ்மீா் இத்திகாஹதுல் முஸ்லீமின் ஆகிய இரு அமைப்புகளுக்கு மத்திய அரசு இம்மாத தொடக்கத்தில் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.