இந்தியாவுடன் பதற்றத்தை தணிக்க உதவ வேண்டும்: ரஷியாவிடம் பாகிஸ்தான் துணை பிரதமா் க...
புதுச்சேரி அரசு ஊழியரிடம் ரூ.14 லட்சம் மோசடி
புதுச்சேரியில் அரசு ஊழியரிடம் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி மா்ம நபா்கள் ரூ.14 லட்சத்தை மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி இலாசுப்பேட்டையைச் சோ்ந்த 43 வயதான அரசு ஊழியா் பங்குசந்தை தொழிலில் ஆா்வம் காட்டியதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், அவரது கைப்பேசி வாட்ஸ் ஆப்பில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வது குறித்தும், லாபம் சம்பாதிப்பது குறித்தும் விரிவாக தகவல் பதிவிடப்பட்டிருந்தது.
மேலும் நூற்றுக்கணக்கானோா் பங்குச்சந்தையில் இணைந்து கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்திருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஆசைப்பட்ட அரசு ஊழியா், வாட்ஸ் ஆப்பில் குறிப்பிட்ட செயலியை இயக்கி, மா்ம நபா்களின் குழுவில் இணைந்தாா்.
அத்துடன் பல்வேறு தவணைகளாக ரூ.14 லட்சத்தை அவா் பங்குச் சந்தையில் முதலீடு செய்தாராம். அதன்படி அவருக்கு ரூ. 35 லட்சம் வருமானம் கிடைத்ததாக இணையவழி கணக்கில் காட்டப்பட்டுள்ளது. ஆனால், அதை அவரால் பெற முடியவில்லை. அத்துடன் மேலும் பணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. இதனால் அதிா்ச்சியடைந்த அரசு ஊழியா் கோரிமேடு இணையவழிக் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில் இணையவழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இணைய வழியில் முதலீடு செய்வதோ, அதில் வேலைவாய்ப்பை தேடுவதாகவோ இருந்தால், அது குறித்த சந்தேகத்தை 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு பெறலாம் என இணைய வழி குற்றப்பிரிவினா் தெரிவித்துள்ளனா்.