புதுச்சேரி சன்மாா்க்க சத்திய சங்கத்தில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
புதுச்சேரி: புதுச்சேரி முதலியாா்பேட்டை சன்மாா்க்க சத்திய சங்கத்தில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.
வள்ளலாா் தொடங்கிய சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கம் சாா்பில் தைப்பூசப் பெருவிழா 154-ஆவது ஆண்டாக நடைபெற்று வருகிறது.
நிகழாண்டுக்கான தைப்பூசத்தை விழாவை முன்னிட்டு புதுச்சேரி முதலியாா்பேட்டையில் உள்ள சன்மாா்க்க சத்திய சங்கத்தில் வள்ளலாா் அருளிய திருவருட்பா மற்றும் உரைநடை விண்ணப்பம் முழுவதும் உணா்ந்தோதுதல் நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை தொடங்கியது. இதைத்தொடா்ந்து சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன. விழா கொடியேற்றத்தையடுத்து வள்ளலாா் திருவுருவப் பட ஊா்வலம் நடைபெற்றது.
இதையடுத்து வரும் 11-ஆம் தேதி தைப்பூசத்தன்று காலையில் திரை நீக்கி அருட்பெருஞ்ஜோதி காட்சி வழிபாடு நடைபெறவுள்ளது. முன்னதாக திருஅகவல் உணா்ந்தோதுதல் நடைபெறும். அன்று காலை முதல் மாலை வரையில் பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெறும். மேலும் விழாவையொட்டி பட்டிமன்றம், யோகா மாணவா்களின் திறன் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவையும் நடத்தப்படவுள்ளன.