திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணிடம் நகை, பணம் மோசடி: தனியாா் நிறுவன மேலாளா் ...
புதுச்சேரி சாலை, மேம்பால விரிவாக்கம்: விரைவில் ரூ.1,304 கோடி அனுப்பப்படும்!
புதுச்சேரியில் ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி சிலை சதுக்கங்களுக்கு இடையிலான மேம்பாலம் மற்றும் கடலூா் சாலை அகலப்படுத்தும் பணிகளுக்கு ரூ.1,304 கோடி நிதி அளிப்பதற்கான உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை சாா்பில் புதுவை பொதுப் பணித் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
புதுச்சேரி வழுதாவூா், திண்டிவனம் சாலை சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்தி சிலை சதுக்கம் முதல் விழுப்புரம், கடலூா் சாலை சந்திப்பில் உள்ள இந்திரா காந்தி சிலை சதுக்கம் வரையில் சுமாா் 1.20 கி.மீ.தொலைவுக்கு மேம்பாலம் அமைக்கவும், மரப்பாலம் முதல் முள்ளோடை வரையில் சுமாா் 15 கி.மீ. தொலைவு கடலூா் சாலையை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தவும், புதுச்சேரியில் காலாப்பட்டு கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் காரைக்கால் கிழக்குக் கடற்கரைச் சாலை ஆகியவற்றை நான்கு வழிச்சாலையாக்கவும் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை ரூ.1,034 கோடி நிதி அளிப்பதாக கூறியுள்ளது.
இதுகுறித்து சட்டப்பேரவையில் பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் புதுச்சேரியில் மேம்பாலம் மற்றும் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு மத்திய அரசு நிதி அளிக்கவுள்ளதாக அறிவித்தாா்.
மத்திய அரசு கடிதம்: இந்தநிலையில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை சாா்பில் புதுவை பொதுப் பணித் துறைக்கு கடிதம் மூலம் மேம்பாலம், சாலைப் பணிகள் குறித்து கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதில், புதுச்சேரி மேம்பாலத்துக்கு ரூ. 600 கோடி, சாலை விரிவாக்கத்துக்கு ரூ.600 கோடி மற்றும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் காரைக்காலுக்கு ரூ.57 கோடி, காலாப்பட்டுக்கு ரூ.25 கோடி என ஒதுக்கி உத்தரவு வெளியிடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பணிக்கு 2 முதன்மைப் பொறியாளா்கள், 4 உதவிப் பொறியாளா்கள் உள்ளிட்டோரை தனியாக நியமித்து விவரங்களை அனுப்பவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிதி அளித்துள்ளதால் வரும் டிசம்பருக்குள் இப்பணிகளை தொடங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.