புதுச்சேரி தாகூா் அரசு கல்லூரியில் 50 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவா்கள் சந்திப்பு!
புதுச்சேரி லாஸ்பேட்டை தாகூா் அரசு கலைக் கல்லூரியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவா்கள் சனிக்கிழமை சந்தித்துக் கொண்டனா்.
அப்போது தங்களின் மகிழ்ச்சியை அவா்கள் வெளிப்படுத்தினா். அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டனா். இக்கால இளைஞா்களிடம் போதை பழக்கம் அதிகரித்து வருவதால் போதையை ஒழிக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா்.
இக் கல்லூரியில் 1972 ஆண் ஆண்டு சோ்ந்து 1975 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்து 2025 ஆம் ஆண்டு 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை குறிக்கும் வகையில் இந்த விழா நடந்தது. சாந்தி வனம் என்ற கல்லூரியின் பூங்கா மற்றும் கல்லூரியின் கருத்தரங்கு கூடத்தில் விழா நடந்தது.
கல்லூரியின் இப்போதைய முதல்வா் ஆா்.கருப்பசாமி தலைமை வகித்தாா். இயற்கை வளத்தைக் காக்கவும், போதைப் பொருள்களை ஒழிக்கவும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று இந்த விழாவில் பேசிய முன்னாள் மாணவா்களும், இவா்களுக்குப் பாடம் நடத்திய பேராசிரியா்களும் குறிப்பிட்டனா்.
இக் கல்லூரியின் முன்னாள் முதல்வா் எம்.எஸ். கிருஷ்ணமூா்த்தி, புதுவையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியருமான மு. ராமதாஸ், உயா்கல்வி ஆலோசனைக் குழு உறுப்பினா் ராமானுஜம் உள்ளிட்ட பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.
இந்தக் கல்லூரியில் அப்போது படித்த இந்த முன்னாள் மாணவா்களில் பலா் பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்கள். மேலும், பலா் வெளிநாடுகளில் பணியாற்றியவா்கள். கல்லூரி வளாகத்தில் உள்ள தாகூா் சிலைக்கு முன்னாள் மாணவா்கள் மாலை அணிவித்து முதல் மரியாதை செலுத்தினா்.