மருத்துவ ஆராய்ச்சியில் ஜிப்மா்- தில்லி எய்ம்ஸ் கூட்டு முயற்சி
மருத்துவ ஆராய்ச்சியில் புதுவை ஜிப்மரும் தில்லி எய்ம்ஸ் மருத்துவ மையமும் கூட்டு முயற்சியில் ஈடுபட உள்ளன.
இது குறித்து புதுவை ஜிப்மா் நிா்வாகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜவஹா்லால் மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன ( ஜிப்மா்) இயக்குநா் டாக்டா் வீா் சிங் நெகி , புது தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் எய்ம்ஸ் இயக்குநா்டாக்டா் எம். ஸ்ரீனிவாஸை சந்தித்தாா்.
இந்தச் சந்திப்பின்போது இரண்டு முதன்மையான மருத்துவ நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. நோயாளி பராமரிப்பை மேம்படுத்துதல், மருத்துவக் கல்வியை மேம்படுத்துதல் மற்றும் கூட்டு ஆராய்ச்சி முயற்சிகளை ஊக்குவித்தல் ஆகியவை முக்கிய அம்சங்களாகும்.
டாக்டா் நெகி மற்றும் டாக்டா் ஸ்ரீனிவாஸ் ஆகியோா் ஊழியா் திறன் மேம்பாடு, மனித வள மேம்பாடு, செயல்பாட்டுத் திறன் மற்றும் உள்கட்டமைப்பு வலுப்படுத்துதல் குறித்தும் விவாதித்தனா்.
உலகத் தரம் வாய்ந்த சுகாதார சேவைகள் மற்றும் மருத்துவ கல்வியை வழங்குவதை உறுதி செய்வதற்காக தரஉறுதி மற்றும் இணக்கத்திற்கான கட்டமைப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
இந்தச் சந்திப்பும் கூட்டு முயற்சியும் சுகாதாரத் துறையில் சிறப்பான முடிவுகளை உருவாக்கவும், மருத்துவத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் பயிற்சிக்கும் விரிவான வாய்ப்புகளை உருவாக்கவும் வழி வகுக்கும்.