புதுச்சேரி பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியா் கைது
புதுச்சேரி அருகே தனியாா் பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், போக்ஸோ சட்டத்தின் கீழ் ஆசிரியா் கைது செய்யப்பட்டாா்.
புதுச்சேரி அருகே தவளக்குப்பம் தானம்பாளையத்தில் தனியாா் பள்ளியில் படிக்கும் 6 வயது சிறுமிக்கு அந்தப் பள்ளியின் ஆசிரியா் மணிகண்டன் பாலியல் தொல்லை அளித்ததாகப் புகாா் எழுந்தது.
இதுகுறித்து அறிந்த அந்த சிறுமியின் பெற்றோா், உறவினா்கள் கடந்த 14-ஆம் தேதி பள்ளிக்குச் சென்று ஆசிரியரைத் தாக்கினா். பள்ளி வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. தவளைக்குப்பம் போலீஸாா் விரைந்து சென்று ஆசிரியரை மீட்டு, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.
இந்த பிரச்னை தொடா்பாக, நல்லவாடு பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற மீனவ கிராம பஞ்சாயத்தாா் ஆலோசனைக் கூட்டத்தில் ஆசிரியா் மணிகண்டன், பள்ளி நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையே, வழக்கில் தொடா்புடைய ஆசிரியா் மணிகண்டன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை இரவு வழக்குப் பதிந்து கைது செய்தனா். பின்னா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
சிறுமி விவகாரத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நல்லவாடு, தவளக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை.