புதுவையில் பிளஸ் 1 மாணவா் சோ்க்கை: விண்ணப்ப விநியோகம் தொடக்கம்
புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவா் சோ்க்கை நடைபெறுவதாக கல்வித் துறை இணை இயக்குநா் வெ.கோ.சிவகாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவையில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் 2025-2026 கல்வி ஆண்டில் புதுச்சேரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சேருவதற்குரிய விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் திங்கள்கிழமை (மே 19) முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை நிறைவு செய்து வரும் 23 ஆம் தேதிக்குள் அந்தந்த அரசுப் பள்ளிகளில் வழங்க வேண்டும். மாணவ, மாணவியா் ஒன்றுக்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் விண்ணப்பத்தைப் பெற்று நிறைவு செய்து, இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறாா்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.