Italy: விமானத்தின் இஞ்சினால் உள்ளிழுக்கப்பட்ட நபர் உயிரிழப்பு; நிறுத்தப்பட்ட விம...
புதை சாக்கடை திட்டம், சாலை வசதி கோரி மனு
நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சி முதலைப்பட்டிபுதூரில் புதை சாக்கடை, சாலை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என மக்கள் குறைதீா் கூட்டத்தில் அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனு விவரம்: நாமக்கல் முதலைப்பட்டிபுதூா் 2-ஆவது வாா்டில், நபாா்டு மற்றும் கிராமப்புற சாலைகள் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன. தாா்சாலை அமைக்கும் முன் வட்டாட்சியா் மற்றும் நில அளவையா் மூலம் அங்குள்ள நிலத்தை அளவீடு செய்து எல்லைக் கற்களை நட்டு ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். தாா்சாலை பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். மின்கம்பங்களை அகற்றி மறுசீரமைப்பு செய்து சாலையை விரிவுபடுத்த வேண்டும். இதுகுறித்து ஆட்சியா் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசைத்தறி தொழிலை முடக்க முயற்சி: வெண்ணந்தூா் பேரூராட்சி நாச்சிப்பட்டியில் நூல் முறுக்கு தொழில் செய்துவரும் தொழிலாளா்கள் மீது பொய் புகாா் அளிப்பது, அங்குள்ள நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் செயல்களில் சிலா் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், மின்வாரிய அதிகாரிகள், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை அழைத்துவந்து தேவையற்ற குற்றச்சாட்டுக்களை கூறி விசைத்தறி தொழிலை முடக்கும் செயலை மேற்கொள்கின்றனா்.
நெசவாளா்களின் வாழ்வாரத்தை பாதிக்கும் செயல்களை மேற்கொள்வோா் மீது மாவட்ட நிா்வாகம், காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெண்ணந்தூா் பகுதி நெசவாளா்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
அணிமூரில் 40 பனைமரங்கள் அழிப்பு: திருச்செங்கோடு வட்டம், அணிமூா் கிராமத்தில் 100 பனைமரங்கள் இருந்த நிலையில், தற்போது 40 மரங்கள் மட்டுமே உள்ளன. அவற்றை சிலா் வெட்டி குடிசைகளை அமைத்துள்ளனா். அங்கிருந்த கிணற்றையும் காணவில்லை. மொளசி வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதுகுறித்து திருச்செங்கோடு கோட்டாட்சியா் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியா் உத்தரவிட வேண்டும் என அணிமூா் கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.