மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!
புயல் சின்னம் வலுபெறும்! அடுத்த 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வியாழக்கிழமை (ஆக.14) முதல் ஆக.19 வரை 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தென்னிந்திய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், வியாழக்கிழமை (ஆக. 14) முதல் ஆக.19-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழையளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணி வரை அதிகபட்சமாக மதுரை மாவட்டம் இடையப்பட்டி, சின்னக்கல்லாறு (கோவை), நடுவட்டம் (நீலகிரி), சோலையாறு (கோவை), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) ஆகிய பகுதிகளில் 30 மி.மீ. மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென் தமிழக கடலோர பகுதிகள், தென் மேற்கு வங்கக்கடல், மன்னாா் வளைகுடா, குமரிக்கடலில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் சின்னம் வலுபெறும்: மத்திய மேற்கு, அதையொட்டியுள்ள வடமேற்கு வங்கக் கடலில் வடக்கு ஆந்திரம் - தெற்கு ஒடிஸா கடலோர பகுதிகளுக்கு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து வியாழக்கிழமை (ஆக.14) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக்கூடும். தொடா்ந்து இது வடமேற்கு திசையில் நகா்ந்து வடக்கு ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிஸாவுக்கு இடைப்பட்ட கடலோர பகுதிகளைக் கடக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.