புறாக்களுக்கு உணவளித்த மூதாட்டிக்கு ரூ.80 ஆயிரம் அபராதம்! எங்கே? ஏன்?
சிங்கப்பூர் நாட்டில் புறாக்களுக்கு உணவளித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூதாட்டிக்கு ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் சன்முகம்நாதன் ஷாம்லா (வயது 70), இவர் தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடத்திலுள்ள புறாக்களுக்கு வழக்கமாக உணவளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
சிங்கப்பூரின் வனவிலங்குச் சட்டத்தின்படி, வன உயிரினங்களுக்கு வனத்துறை தேசியப் பூங்காவின் உயர் அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெறாமல் உணவளிப்பது சட்டவிரோதம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரலில் அவர் புறக்களுக்கு உணவளித்ததைக் கண்ட தேசியப் பூங்கா அதிகாரிகள், மீண்டும் அந்தச் செயலில் ஈடுபடக்கூடாது என எச்சரித்துள்ளனர்.
இருப்பினும், ஷாம்லா அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல், 2024 நவம்பர் வரை அங்குள்ள புறாக்களுக்கு தொடர்ந்து உணவளித்து வந்துள்ளார்.
இத்துடன், கடந்த பிப்ரவரியில் அவரது வீட்டின் அருகிலுள்ள புறாக்களைப் பிடிக்க தேசியப் பூங்கா அதிகாரிகள் வலைகளை விரித்தபோது, அதனை எதிர்த்து ஷாமலா அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், அவர்கள் தங்களது பணிகளைப் பாதியிலேயே நிறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், புறாக்களுக்கு உணவளித்ததற்காக அவர் மீது அந்நாட்டின் வனவிலங்குச் சட்டத்தின் படி இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், கடந்த 2020 ஆம் ஆண்டு 8 வழக்குகள் அவர் மீது பதிவுச் செய்யப்பட்டன. பின்னர், அப்போது அவர் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டிருந்தார். அத்துடன் சேர்த்து, அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட 11 வழக்குகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்தத் தொடர் குற்றத்துக்காக ஷாம்லாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 1,200 சிங்கப்பூர் டாலர்கள் (இந்திய பண மதிப்பீட்டில் ரூ. 79,373) அபராதமாக விதித்துள்ளது.
மேலும், அவர் அபராதம் செலுத்தவில்லை என்றால் இரண்டு நாள்கள் சிறையில் கழிக்க நேரிடும் என நீதிபதி எச்சரித்த நிலையில் இன்று (மே 28) அவர் அபராதம் செலுத்தி இந்த வழக்கிலிருந்து விடுதலையானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: 'பட்டினிதான் மிகப்பெரிய நோய்' - காஸாவில் தன் குழந்தைகளுக்காக குப்பைகளில் உணவு தேடும் பெண்!