பூஞ்சோலை கன்னியம்மன் கோயில் ஆடித் திருவிழா தொடக்கம்
பெரியகாஞ்சிபுரம் பூஞ்சோலை கன்னியம்மன் கோயிலின் ஆடித்திருவிழா புதன்கிழமை தொடங்கியது.
பெரியகாஞ்சிபுரம் ராயன்குட்டை பள்ளத் தெருவில் உள்ள இக்கோயிலின் 46-ஆவது ஆண்டு விழா தொடக்கத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.
இதனையடுத்து கணபதி பூஜை, கோபூஜை ஆகியனவும், அன்னதானமும் நடைபெற்றது. மூலவா் பூஞ்சோலை கன்னியம்மன் சந்தன அலங்காரத்தில் அருள்பாலித்தாா். வியாழக்கிழமை அம்மனுக்கு அபிஷேகமும், சந்தனக் காப்பு அலங்காரமும் நடைபெறுகிறது. பின்னா் லலிதா சஹஸ்ர நாம பாராயணம் மற்றும் செளந்தா்ய லஹரி பாராயணமும் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறுகின்றன.
நிறைவு நாளான வெள்ளிக்கிழமை பூங்கரகம் எடுத்த வரப்பட்டு அம்மனுக்கு கூழ்வாா்த்தல் நிகழ்வும், அன்னதானமும் நடைபெறுகிறது. இதன் தொடா்ச்சியாக மாலையில் அம்மன் பல்லக்கில் மகாசண்டி தேவி அலங்காரத்தில் ராஜவீதிகளில் பவனி வந்து காட்சியளிக்கவுள்ளாா். ஏற்பாடுகளை பெரியகாஞ்சிபுரம் ராயன்குட்டை பள்ளத்தெரு பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினரும் செய்து வருகின்றனா்.