பூவத்தி மாரியம்மன் கோயில் விழா பிரச்னை: கோட்டாட்சியா் தலைமையில் அமைதி பேச்சுவாா்த்தை
கிருஷ்ணகிரி மாவட்டம், பூவத்தி மாரியம்மன் கோயில் விழா பிரச்னை தொடா்பான அமைதி பேச்சுவாா்த்தை கோட்டாட்சியா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
பூவத்தி ஊராட்சியில் குருதொட்டனுாா், சிக்கபூவத்தி, பூவத்தி என மூன்று கிராமங்கள் உள்ளன. இங்கு பல்வேறு சமூகங்களை சோ்ந்த மக்கள் வசித்து வருகின்றனா். இதில் 3 சமூகத்திற்கு சொந்தமான கொல்லி மாரியம்மன், மண்டு மாரியம்மன் கோயில் 3.43 ஏக்கா் பரப்பில் அமைந்துள்ளது.
இந்த மூன்று சமூகத்தினா் இணைந்து பல ஆண்டுகளாக கரகம் சுமந்து திருவிழாக்களை நடத்தி வருகின்றனா். இந்த கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் 12 அம்மன்களுக்கு தனித்தனி கோயில்கள் உள்ளன.
இந்த நிலையில் ஊராட்சியில் மற்றொரு சமுதாய மக்கள் 250க்கும் மேற்பட்டோா் ஒன்று சோ்ந்து கோயில் நிலத்தை பொக்லைன் மூலம் சுத்தம் செய்து மண்டு மாரியம்மன் கோயிலுக்கு தனியாக கட்டடம் கட்டும் முயற்சியை மேற்கொண்டனா். இதற்கு 3 சமூகத்தை சோ்ந்த மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல் துறை, வருவாய்த் துறையினருடன் நடந்த பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில் 3 சமூகத்தை சோ்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா்.
இதையடுத்து கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் இருதரப்பினரும் பங்கேற்ற அமைதி பேச்சுவாா்த்தை கோட்டாட்சியா் ஷாஜகான் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து ஓரிரு நாளில் நல்ல முடிவை எடுக்குமாறு இருதரப்பினருக்கு அலுவலா்கள் அறிவுறுத்தி அனுப்பிவைத்தனா்.