பெங்களூரில் நாளை மூவா்ணக்கொடி பேரணி: பாஜக திட்டம்
பெங்களூரில் மே 15ஆம் தேதி மூவா்ணக்கொடி பேரணி நடத்த கா்நாடக பாஜக திட்டமிட்டுள்ளது.
இது குறித்து பெங்களூரில் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
பயங்கரவாதிகள் மற்றும் அவா்களை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த பாதுகாப்புப் படைகளுக்கு ஆதரவாக மூவா்ணக்கொடி பேரணியை பெங்களூரில் மே 15ஆம் தேதி நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
பெங்களூரு, மல்லேஸ்வரம், 18ஆவது குறுக்குத் தெருவில் உள்ள ஷிரூரு பூங்காவில் மே 15ஆம் தேதி காலை 11 மணிக்கு இந்தப் பேரணி தொடங்குகிறது. இதுபோன்ற பேரணி மே 16, 17ஆம் தேதிகளில் மாவட்டத் தலைமையிடங்களிலும், மே 18 முதல் 23ஆம் தேதிவரை வட்டத் தலைமையிடங்களிலும் நடைபெறும்.
இந்த பேரணியின்போது பாஜகவின் கொடி இருக்காது. மாறாக, தேசியக்கொடி மட்டும் பயன்படுத்தப்படும். இதில் பொதுமக்கள் திரளாக பங்கேற்க அழைப்பு விடுக்கிறேன்.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் மூலம் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனா். பயங்கரவாத பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. போரை நிறுத்தும்படி கெஞ்சும் நிலைக்கு பாகிஸ்தானை தள்ளியுள்ளோம். இந்த விவகாரத்தில் அரசியல் நடத்துவதைக் காட்டிலும், பாதுகாப்புப் படையினருக்கு காங்கிரஸ் ஆதரவாக இருக்க வேண்டும்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை தாரைவாா்த்தது, மும்பை தாக்குதலுக்கு பிறகு மௌனம் காத்தது போன்ற கடந்தகால சம்பவங்கள் குறித்து காங்கிரஸ் பேச மறுக்கிறது. தற்போதைய நிகழ்வையும், 1971இல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது மேற்கொண்ட நடவடிக்கையையும் ஒப்பிட வேண்டியதில்லை.
பாகிஸ்தானை பிரித்து வங்கதேசத்தை உருவாக்கியதை சாதனையாக காங்கிரஸ் சொன்னால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதியை ஏன் விட்டுக்கொடுத்தனா் என்பதற்கும் பதில் சொல்ல வேண்டும். ஆனாலும் அது குறித்தெல்லாம் காங்கிரஸ் பேசுவதில்லை.
போா் நிறுத்தத்திற்கு மூன்றாம் தரப்பு தலையீடு எதுவும் இல்லை என்பதை மத்திய அரசு ஏற்கெனவே தெளிவுப்படுத்திவிட்டது. எந்தக் காலத்திலும் மூன்றாம்தரப்பு மத்தியஸ்தத்தை இந்தியா ஏற்காது என்றாா்.