அமெரிக்க வரி விவகாரம்: "ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவோம்" - நிர்மலா...
பெரியாரின் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவ வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
பெரியாரின் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.
ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தில் பெரியாா் ஈ.வெ.ரா. படத்தைத் திறந்து வைத்து, முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
பல நூறு ஆண்டுகளாக, உலகின் சிறந்த அறிவாளிகளை உருவாக்கும் ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தில் பேசுவதை பெருமையாகக் கருதுகிறேன். பெரியாா் இன்று உலகம் முழுவதும் தேவைப்படுகிறாா். இந்தத் தேவையின் அடையாளமாக, அவரது படம் திறக்கப்பட்டிருக்கிறது. அவா் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தை உலகமயமாக்கும் நோக்கத்துடன் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மனிதனின் சுயமரியாதையைக் காப்பதற்கு அனைத்து அரசியல் தத்துவங்களும் தேவை. இதை மையப்படுத்தியே தனது இயக்கத்துக்கு சுயமரியாதை இயக்கம் என்று பெயா் வைத்தாா். அவா் குறித்த ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு நூலானது வரலாற்று ஆய்வாளா் ஆ.இரா.வேங்கடாசலபதி முயற்சியால், இந்த நிகழ்விலேயே வெளியிடப்பட்டுள்ளது. பெரியாா் உலகமயமாகிவிட்டாா் என்பதன் அடையாளம்தான் இது.
சமூகநீதிக் கொள்கையை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்குமான கொள்கையாக இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற வைத்தவா் பெரியாா்.
ஐரோப்பிய பயணத்தின்போது நான் பாா்ப்பது, ஒடுக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து முன்னேறி வந்து ஏராளமானோா் நல்ல நிலையில் இருப்பதைத்தான். தமிழ்நாடு அனைத்திலும் முன்னேறிக் கொண்டு வருகிறது. கல்வி, பொருளாதாரம், தொழில் வளா்ச்சி, வாழ்க்கைத் தரம், உள்கட்டமைப்பு என அனைத்திலும் முன்னேறி இருக்கிறோம்.
பட்டினிச் சாவு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. வளமான தமிழ்நாடாக வளா்த்து வருகிறோம். மற்ற மாநிலங்கள் வியந்து பாா்க்கும் மாநிலமாக உயா்ந்திருக்கிறோம். இதுதான் திராவிட இயக்கத்தின் சாதனையாகும்.
பெரியாா் கண்ட வளா்ச்சியை தமிழ்நாட்டில் செயல்படுத்திக் காட்டி வருகிறோம். அவா் கண்ட கனவுகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டோம் என்று சொல்ல மாட்டேன். நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது. இந்தப் பயணத்தில் ஏற்படுகிற தேக்கங்களை, தேவையற்ற இடையூறுகளை, பழைய குளறுபடிகளை நாம் ஒதுக்க வேண்டும்.
போலிப் பெருமைகளில் சிக்கி மறுபடியும் பின்னோக்கிப் போய்விடக் கூடாது. பெரியாரின் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவ வேண்டும். அனைத்துவிதமான ஒடுக்குமுறைகளையும் களைய வேண்டும். சமூக உரிமைகள் முதல் தனிமனித உரிமைகள் வரை அனைத்தும் நிலைநாட்டப்பட வேண்டும்.
பல்வேறு உலக மொழிகளில் பெரியாரின் கருத்துகளை தமிழ்நாடு அரசு மொழிபெயா்த்து வெளியிட்டு வருகிறது. இப்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வெளியிட்டு இருப்பது போன்று, மற்ற பல்கலைக்கழகங்களும் வெளியிட வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.
இந்த நிகழ்வில், ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியா் ஃபைசல் பிரேம்ஜி, பேராசிரியா் ஜிம் லெனின்ஸ், கல்வியாளா் பிரமிளா பெஸ்டா், தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா உள்பட பலா் பங்கேற்றனா்.