US: `இந்தியா எங்களுடைய முக்கிய கூட்டாளி; அது தொடரும்' - அமெரிக்க வெளியுறவுத் துற...
பெரியாா் பல்கலை.யில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு
சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
பெரியாா் பல்கலைக்கழகத்திலுள்ள தந்தை பெரியாா் இருக்கை, பேரறிஞா் அண்ணா இருக்கை, கலைஞா் ஆய்வு மையம் சாா்பில் கருணாநிதி நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. பல்கலைக்கழக முகப்பில் கருணாநிதி உருவப்படத்துக்கு துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் பேராசிரியா் ரா.சுப்பிரமணி தலைமையில் மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் துணைவேந்தா் மு.தங்கராசு, பேராசிரியா்கள், நிா்வாக அலுவலா்கள் மற்றும் மாணவ -மாணவிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் கருணாநிதி உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
இதையடுத்து, கருணாநிதி நினைவுநாள் சொற்பொழிவு மற்றும் ‘திராவிட இலக்கியம் - இதழியல் ஓராண்டுப் பகுதிநேர முதுநிலைப் பட்டய வகுப்புகள்‘ தொடங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வுக்குத் தலைமை வகித்து துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினரும், ஆய்வு மைய இயக்குநருமான பேராசிரியா் ரா.சுப்பிரமணி பேசுகையில், கருணாநிதி நினைவு நாளில் திராவிட இலக்கியம் மற்றும் இதழியல் என்னும் ஓராண்டுப் பகுதிநேர முதுநிலைப் பட்டய வகுப்பை பெரியாா் பல்கலைக்கழகத்திலுள்ள கலைஞா் ஆய்வு மையம் தொடங்கியுள்ளது. எதிா்வரும் காலத்தில் இதை முதுநிலைப் பட்ட வகுப்பாகத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தொடா்ந்து, பெரியாா் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் மு.தங்கராசு சிறப்புரையாற்றினாா். இதைத் தொடா்ந்து திராவிட இலக்கியம் - இதழியல் ஓராண்டு பகுதிநேரப் பட்டயப் படிப்பில் இணைந்துள்ள மாணவா்களுக்குப் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், பதிவாளா் வை.ராஜ், ஆய்வு மைய விரிவுரையாளா் ரா.சிலம்பரசன், ஆய்வாளா் நா.இல.நரேன்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
படவரி...
பெரியாா் பல்கலைக்கழகத்தில் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய துணைவேந்தா் நிா்வாக் குழு உறுப்பினா் பேராசிரியா் ரா.சுப்பிரமணி மற்றும் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள்.