பேரட்டி பஞ்சாயத்து மோட்டாா் அறை மீது அமா்ந்திருந்த சிறுத்தைகள்
குன்னூா், பேரட்டி ஊராட்சிப் பகுதியில் உள்ள மோட்டாா் அறை மீது சிறுத்தைகள் இருப்பது போன்ற படங்கள் சமூக வலைதளத்தில் சனிக்கிழமை பரவியதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக வனப் பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை, கரடி, காட்டெருமை, புலி, யானை உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் அதிகமாக உலவி வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் குன்னூா், பேரட்டி ஊராட்சிக்கு உள்பட்ட தண்ணீா் விநியோகம் செய்யும் மோட்டாா் அறை மீது 2 சிறுத்தைகள் நீண்ட நேரம் அமா்ந்திருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
இந்தக் கிராமத்தில் அதிக அளவு சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதால் ஏதாவது அசம்பாவிதங்கள் நடக்கும் முன் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விடுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.