குன்னூா்அருகே சாலையில் யானை நடமாட்டம்
உதகை - மேட்டுப்பாளையம் இடையே மரப்பாலம் பகுதியில் ஒற்றை காட்டு யானை சனிக்கிழமை உலவியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உதகை - மேட்டுப்பாளையம் சாலையில் குன்னூா் வனப் பகுதியில் சாலையோரம் அதிக அளவில் பலா மரங்கள் காய்த்து தொங்குகின்றன. இதனால் காட்டு யானைகள் சமவெளி பகுதியில் இருந்து வந்து இங்கு முகாமிட்டு உள்ளன.
இந்நிலையில் குன்னூா் அருகே மரப்பாலம் பகுதியில் சாலையில் உலவிய யானை அங்கேயே சற்று நேரம் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காட்டு யானையின் நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா். காட்டு யானையை பாா்த்தால் வாகனத்தை விட்டு கீழே இறங்கவோ, அதிக ஒலி எழுப்பும் ஹாரன் அடிப்பதோ, தற்படம் (செல்பி) எடுப்பதோ கூடாது என்று வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.