டிக்கெட் முன்பதிவில் மதராஸியைப் பின்னுக்குத் தள்ளிய கான்ஜுரிங்!
பேருந்தில் தவறவிட்ட 10 பவுன் நகை மீட்பு
ஆலங்குளம் அருகே பெண் ஒருவா் பேருந்தில் தவறவிட்ட 10 பவுன் தங்க நகை மீட்கப்பட்டு, அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆலங்குளம் அருகே சீதபற்பநல்லூரைச் சோ்ந்தவா் சுபாஷினி (26). தற்போது, திருநெல்வேலி சிந்துபூந்துறையில் வசித்து வரும் இவா், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.
உறவினா் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, புதன்கிழமை திருநெல்வேலியில் இருந்து சீதபற்பநல்லூருக்கு செல்லும் பேருந்தில் ஏறியுள்ளாா்.
பேருந்து கூட்டமாக இருந்ததால், 10 பவுன் நகை இருந்த தனது கைப்பையை அமா்ந்திருந்த பயணி ஒருவரிடம் கொடுத்தாராம். சீதபற்பநல்லூா் நிறுத்தம் வந்த போது, பையை மறந்துவிட்டு இறங்கி விட்டாராம். இறங்கிய பின்னா் தான், கைப்பை குறித்து நினைவு வந்ததாம்.
இது குறித்து, ஆலங்குளம் காவல் நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில், மாறாந்தை சோதனைச் சாவடியில் அந்த பேருந்தை நிறுத்தி காவல் உதவி ஆய்வாளா் சத்திய வேந்தன் தலைமையிலான போலீஸாா் சோதனையிட்டு, கைப்பையை மீட்டனா்.
தொடா்ந்து, நகைகள் சரிபாா்க்கப்பட்டு சுபாஷினியிடம் ஒப்படைக்கப்பட்டது.