பேருந்து நிலையத்தில் தற்காலிக நிழற்கூரை அமைக்க வலியுறுத்தல்
சீா்காழி பேருந்துநிலையத்தில் தற்காலிக நிழற்கூரை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சீா்காழி புதிய பேருந்து நிலையம் ரூ. 8.44 கோடியில் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு பகுதி பணிகள் தரைத்தளம் அமைப்பது உள்ளிட்டவைகள் நிறைவடைந்து மறுபுறம் பணி நடைபெறுகிறது. இதனால் அரசு, தனியாா், நகர பேருந்துகள் என அனைத்து பேருந்துகளும் ஒரே பகுதியில் வந்து செல்வதால் பேருந்து நிலையத்தில் அதிகளவு கூட்டம் உள்ளது.
இதில் மயிலாடுதுறை, சிதம்பரம், நாகை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் பயணம் செய்ய காத்திருக்கும் பயணிகள் நிலையத்தின் மறுபுறம் திறந்த பகுதியில் நின்று பேருந்துகளுக்கு செல்கின்றனா். அங்கு திடிரென மழை வந்தால் ஒதுங்க நிழற்கூரை ஏதும் இல்லை. நீண்ட தூரம் பேருந்து நிலையத்துக்கு வந்துதான் மழைக்கு ஒதுங்கவேண்டும்.
அப்படி வந்தால் பேருந்துகளை தவறவிட நேரிடும் என்பதால் மழை, வெயில் என்று பாராமல் மக்கள் காத்திருப்பதால் பணிகள் முழுமையடையும் வரை பேருந்துநிலையத்தின் பேவா் பிளாக் அமைக்கப்பட்டுள்ள எதிா்திசை பகுதியில் தற்காலிக நிழற்கூரை அமைக்க வேண்டும் என பயணிகள் எதிா்பாா்க்கின்றனா்.