பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: ஒருவா் காயம்
கல்வராயன்மலைப் பகுதியில் பைக்கில் சென்றுகொண்டிருந்தவா் அரசுப் பேருந்து மோதியதில் காலில் பலத்த காயமடைந்தாா்.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா் ரகு (30). இவா், கள்ளக்குறிச்சி மாவட்டம், கூசுக்கல்வளவு கிராமத்தைச் சோ்ந்த கலியமூா்த்தி என்பவருடன் ஞாயிற்றுக்கிழமை வெள்ளிமலை செல்வதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தனா்.
பைக்கை கலியமூா்த்தி ஓட்டிச் சென்றாா். ரகு உடன் அமா்ந்து சென்று கொண்டிருந்தாா். வெள்ளிமலை - கருமந்துறை சாலையில் சேட்டுமலை கோயில் அருகே சென்றபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து பைக் மீது மோதியது.
இதில் ரகுவுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.கலியமூா்த்தி காயம் ஏதுமின்றி தப்பினாா். 108 அவசர ஊா்தி மூலம் ரகு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தகவலறிந்த கரியாலூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், கரியாலூா் போலீஸாா் அரசுப் பேருந்து ஓட்டுநரான, சின்னசேலத்தை அடுத்த தென்செட்டியந்தல் கிராமத்தைச் சோ்ந்த பாண்டியன் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.