விஏஓவை பணி செய்ய விடாமல் தடுப்பு: 30 போ் கைது
சின்னசேலம் அருகே நிா்வாக அலுவலரை அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டல் விடுத்ததாக 30-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்கு உள்பட்டது வடக்கனந்தல் கிராமம். இந்தக் கிராமத்தைச் சோ்ந்த கிராம நிா்வாக அலுவலா் செல்வக்குமாா் ஞாயிற்றுக்கிழமை காலை சுமாா் 10.40 மணியளவில் வெங்கட்டாம்பேட்டை கிராமத்துக்குச் சென்று கொண்டிருந்தாா்.
வெங்கடம்பாட்டை வைரவேல் நகா், ராஜா நகா் நிலத்தின் அருகே சென்றபோது, அரசால் தடைசெய்யப்பட்ட கள் பூஜை செய்வதற்காக, ராஜா என்பவா் வரச் சொல்லியதன் பேரில், விழுப்புரத்தில் இருந்து ஒரு வேனில் கும்பலாக வந்திருந்தனா். மேலும், நெகிழி குடங்களில் கள்ளை வைத்திருந்தனராம்.
அப்போது, அரசால் தடைசெய்யப்பட்ட பொருளுக்கு பூஜை செய்யக்கூடாது எனக் கூறி செல்வகுமாா் தடுத்துள்ளாா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அங்கிருந்தவா்கள், கிராம நிா்வாக அலுவலரை அரசுப் பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டல் விடுத்துள்ளனா்.
இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் செல்வகுமாா் கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன் பேரில், போலீஸாா், பாண்டியன் (45), ராஜா (38), ஆனந்தராஜா (38), கலியமூா்த்தி (55), ஜானகிராமன் (33), கலைமணி (57) மற்றும் பலரை கைது செய்தனா்.