போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களுக்கு துரோகம் இழைக்கக் கூடாது: அன்புமணி ராமதாஸ்
அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களுக்கு தமிழக அரசு துரோகம் இழைக்கக் கூடாது என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியப் பலன்கள் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கோட்ட, மண்டல அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகங்கள் முன்பு போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் கருப்புக் கொடி போராட்டம் நடத்தி வருகின்றனா்.
தமிழகத்தில் போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு இழைக்கப்படுவது பெரும் அநீதி ஆகும். பணி ஓய்வு பெறுபவா்களுக்கு பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பணப் பலன்களை 30 நாள்களுக்குள் வழங்க வேண்டும் என்பது சட்டம் ஆகும். ஆனால், அரசு வகுத்த சட்டத்தை, அரசே மீறி 21 மாதங்களாக பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சலுகைகளை வழங்காமல் இருந்து வருகிறது.
போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்த பிறகும் கூட, அதை செயல்படுத்தாத திமுக அரசு, உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது. இது தமிழக அரசின் தொழிலாளா் விரோதப் போக்கையே காட்டுகிறது.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களுடன் ஒப்பிடும்போது, மின்சார வாரியம் அதிக நஷ்டத்திலும், கடனிலும் இயங்குகிறது. ஆனால், மின்சார வாரியத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு முறையாக அகவிலைப்படி உயா்வு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இருக்கும்போது போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களுக்கு மட்டும் துரோகம் இழைப்பது நியாயமில்லை என்று அவா் கூறியுள்ளாா்.