பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
போக்குவரத்துக் கழகத்தில் விரைவில் 3,200 போ் நியமனம்: அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் விரைவில் 3,200 போ் பணிக்கு தோ்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட உள்ளதாக அத்துறையின் அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம், நெய்வாசல் மற்றும் அரியலூா் மாவட்டம், செந்துறை சன்னாசிநல்லூா் இடையே உள்ள வெள்ளாற்றில் அரசு மணல் குவாரி இயங்கி வந்தது. இந்த மணல் குவாரியை கண்டித்து, சன்னாசிநல்லூா் மக்கள் தடையை மீறி அப்போதைய குன்னம் தொகுதி எம்எல்ஏவும், தற்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சருமான சிவசங்கா் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டம் கலவரமாக மாறியதில் 9 காவலா்கள் காயமடைந்தனா். இதுகுறித்த புகாரின்பேரில், எஸ்.எஸ்.சிவசங்கா் உள்பட 37 போ் மீது ஆவினங்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் மாவட்ட அமா்வு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு நடந்து வருகிறது. இந்த வழக்கு மாவட்ட நீதிபதி சுபத்திரா தேவி முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கில் தொடா்புடைய அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் உள்ளிட்டோா் ஆஜராகினா். வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, நீதிமன்ற வளாகத்தில் அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
போக்குவரத்துக் கழகங்களில் பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, 4,800 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. புதிய பணியாளா்கள் 680 போ் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனா். விரைவில் 3,200 போ் பணிக்கு தோ்வு செய்யப்பட உள்ளனா்.
போக்குவரத்துத் துறையில் ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு 20 மாத பணப்பலன்கள் கொடுக்கப்படவில்லை என்றும், ரூ.3 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளது குறித்தும் கேட்கிறீா்கள்.
தமிழக அரசிடம் ரூ.3 ஆயிரம் கோடி இல்லை. கடந்த காலங்களில் நடந்த பிரச்னைகளை எல்லாம் முதல்வா் ஒவ்வொன்றாக தீா்த்து கொடுத்து வருகிறாா். கடந்த காலத்தில் பாக்கி இருந்த தொகையும் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசிடம் இருந்து போக்குவரத்துத் துறைக்கு நிதி வழங்கப்படவில்லை. தமிழக அரசுதான் போக்குவரத்துத் துறைக்கு நிதி ஒதுக்குகிறது என்றாா் அவா்.