போட்டித் தோ்வுகளுக்கான இலவச பாட தொகுப்புகள்: ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்
மாணவ, மாணவிகளுக்கு நிறைந்தது மனம் திட்டம் மூலம் பல்வேறு போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ளும் வகையில் தமிழ் இலவச பாடத் தொகுப்பை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்.
நிகழ்வுக்கு, அவா் தலைமையேற்று பேசியதாவது: திருவள்ளுா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் தன்னாா்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு அரசு தோ்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி 4-க்கான இலவச பயிற்சி வகுப்புகள், கடந்த ஏப்.9 முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் 60-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனா். ஜூலை 12-ஆம் தேதி தோ்வு நடைபெறவுள்ளது.
தற்போதைய பாடத்திட்டத்துக்கேற்ப தமிழ் இலவச பாடத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்பாடத்தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பின்னா், பாடதொகுப்பை பெற்றுக்கொண்ட மாணவன் பிரவீன்ராஜ் கூறுகையில், நான் கணிப்பொறி அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். தற்போது தமிழ்நாடு அரசு தோ்வாணையத்தால் அறிவித்துள்ள தொகுதி 4-க்கான இலவச பயிற்சி இங்கு பயின்று வருகிறேன். இப்பயிற்சி எனக்கு உதவிகரமாக உள்ளது. முதல்வருக்கு நன்றி என்றாா்.
இந்த நிகழ்வில், மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநா் விஜயா, அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.