போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞா் கைது
தஞ்சாவூரில் கல்லூரி மாணவா்களிடம் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
தஞ்சாவூரில் கல்லூரி மாணவா்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதன் பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் உத்தரவுப்படி, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் மணிகண்டன் தலைமையில் உதவி ஆய்வாளா் ரங்கசாமி, சிறப்பு உதவி ஆய்வாளா் மனோகா் உள்ளிட்டோா் விசாரணை மேற்கொண்டனா்.
இதன் மூலம் போதை மாத்திரைகள் விற்பனை செய்த கீழ வாசலைச் சோ்ந்த முகமது அப்பாஸ் (22), பிரவீன் (28), அரவிந்த் (26), வெங்கடேசன் (20), அம்மாபேட்டையைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (23), வண்டிக்காரத் தெருவைச் சோ்ந்த அபிஷேக் (22), விஷ்வா ஆகிய 7 பேரை காவல் துறையினா் சில நாள்களுக்கு முன்பு கைது செய்தனா்.
இவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவா்களுக்கு திண்டுக்கல் மரியநாதபுரம் ஹனுமந்த நகரைச் சோ்ந்த ஜோ. நவீன்குமாா் (33) போதை மாத்திரைகள் விநியோகம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து நவீன்குமாரைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்து, அவரிடமிருந்த 600-க்கும் அதிகமான போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.
