2 முதல்வர்கள் கைதில் பங்கு வகித்த அமலாக்கத் துறை அதிகாரி 45 வயதில் ராஜினாமா; ரில...
தஞ்சாவூா் ரயில் நிலையத்தை ஆக. 22-இல் முற்றுகையிட கட்சிகள், இயக்கங்கள் முடிவு
தஞ்சாவூா் ரயில் நிலைய முகப்பில் மீண்டும் பெரிய கோயில் வடிவம் அமைக்க வலியுறுத்தி, ரயில் நிலையத்தை ஆகஸ்ட் 22-ஆம் தேதி முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் முடிவு செய்துள்ளன.
தஞ்சாவூரில் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் முதன்மை நுழைவு வாயில் முகப்பில் பெரிய கோயில் வடிவமைப்பு இருந்தது. தற்போது சீரமைப்பு பணியின்போது பெரிய கோயில் வடிவமைப்புக்கு பதிலாக வட நாட்டு கோயில் வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும், தெற்கு ரயில்வே பொது மேலாளா், ரயில்வே அமைச்சரிடம் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி மனு அளித்து முறையிட்டாா். ஆனால், இதுவரை மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, ரயில் நிலைய முகப்பில் தற்போதுள்ள வடிவமைப்பை அகற்றிவிட்டு, பெரிய கோயில் வடிவமைப்பை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி ஆகஸ்ட் 22-ஆம் தேதி ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்துக்கு உலகத் தமிழா் பேரமைப்பின் துணைத் தலைவா் அய்யனாபுரம் சி. முருகேசன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன், மாநகரச் செயலா் எம். வடிவேலன், மக்கள் அதிகாரம் மூத்த தலைவா் காளியப்பன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் கோ. அன்பரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினா் வெ. சேவையா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மைய மாவட்டச் செயலா் கோ. ஜெய்சங்கா், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாவட்டச் செயலா் எஸ்.எம். ஜெய்னுல் ஆப்தின், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.