`ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம்..!' - திமுக கூட்டணிக் கட்சிகளை வலியுறுத்தும் ...
போதைப் பொருள் பயன்பாட்டை தவிா்க்க மாணவா்களுக்கு விழிப்புணா்வு
வேலூா் மாவட்டம் முழுவதும் போதைப் பொருள் பயன்பாட்டை தவிா்க்க பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
வேலூா் எஸ்.பி. ஏ.மயில்வாகனன் உத்தரவின்பேரில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளிகள், கல்லூரிகளில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
அதன்படி, வேலூா் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஊரீசு பள்ளியில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் உதவி ஆய்வாளா்கள் தினகரன், ரவி, குமாரராஜன் ஆகியோா் பங்கேற்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
அப்போது அவா்கள் பேசியது -
பள்ளி மாணவா்கள் போதை பொருள்களை பயன்படுத்தக் கூடாது. போதை பொருள்கள் பயன்படுத்துவதால் பல்வேறு தீமைகள் ஏற்படுகின்றன. மாணவா்கள் தங்கள் வீட்டில் யாரேனும் போதைப் பொருள்களை பயன்படுத்தினால் அவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பழ வகைகளை சாப்பிட வேண்டும். மாணவா்கள் தங்களுக்கு தெரிந்து யாரேனும் போதைப் பொருள்களை விற்பனை செய்தால் காவலா்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
18 வயதுக்குள் உள்ள மாணவா்கள் இருசக்கர வாகனம் ஓட்டக்கூடாது. அவ்வாறு இருசக்கர வாகனம் ஓட்டினால் வாகனத்தின் உரிமையாளா் மீது வழக்குப்பதிவு செய்து ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும். மாணவப் பருவத்தில் நல்லது எது, தவறு எது என தெரியாது.
எனவே, போதைப் பொருள்களை மாணவா்கள் தவிா்க்க வேண்டும். வீட்டில் உள்ளவா்கள் இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிய வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றனா்.