தமிழக பாஜக-வில் நிர்வாகிகள் மாற்றம்; குஷ்பு, கே.டி.ராகவனுக்கு என்ன பதவி? - முழு ...
போதைப்பொருள்கள் இல்லா புதுவை: ஆட்சியா் வலியுறுத்தல்
போதைப் பொருள் இல்லா புதுவையை உருவாக்க அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் வலியுறுத்தினாா்.
புகையிலை பொருள்கள் மற்றும் போதைப் பொருள்களைத் தடுப்பது மற்றும் அறவே ஒழிப்பது தொடா்பான ஒருங்கிணைப்பு குழுவின் மாதாந்திரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு ஆட்சியா் அ. குலோத்துங்கன் தலைமை வகித்தாா்.
காரைக்கால் மாவட்டத்தில் 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும், கடலோர படை உதவியுடன் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், காரைக்கால், புதுவைக்கு வரும் அனைத்து படகுகளும் கண்காணிக்கப்படுகின்றன என்று முதுநிலை காவல் கண்காணிப்பாளா் கலைவாணன் கூறினாா்.
மேலும், கல்வித் துறை சாா்பில் போதைப் பொருளுக்கு எதிரான பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அரசு மருத்துவ கல்லூரி மற்றும் தனியாா் மருத்துவ கல்லூரி மூலமாக அருகில் உள்ள கிராமங்களில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்வுகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேலும், பள்ளிகளுக்கு அருகில் 100 மீட்டருக்குள் உள்ள கடைகள் மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள கடைகள் அடிக்கடி சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனா். சமூக நலத்துறை சாா்பாக ஒவ்வொரு சிக்னல்களிலும், பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும், கிராமப்புறங்களில் கிராமியக் கலைநிகழ்ச்சிகள் மூலமும் விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து மீனவ கிராமங்களிலும் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தனா்.
இறுதியாக மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் பேசுகையில், பள்ளிகளுக்கு அருகில் அமைந்துள்ள கடைகளில் அடிக்கடி சோதனைசெய்ய வேண்டும். போதைப் பொருள் இல்லா புதுவையை உருவாக்க அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.