கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
காலதாமதமாகக் கல்வி உதவித் தொகை: மாணவா் கூட்டமைப்பு எச்சரிக்கை
காலதாமதமாக கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதனால் மாணவா்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனா். இதைக் கண்டித்து மாணவா்களைத் திரட்டி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் என்று மாணவா் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவா்கள் கூட்டமைப்பு நிறுவனா் சுவாமிநாதன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஆதிதிராவிட நலத் துறை மற்றும் தலைமை செயலகத்தின் அலட்சியப் போக்கினால் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரையிலான கல்விக் கட்டணம் கிடைக்காமல் பள்ளி, கல்லூரி மாணவா்கள் பலா் பாதிக்கப்பட்டுள்ளனா்.
ஆதிதிராவிட நலத் துறையின் மூலமாக ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரையில் இலவச கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக அத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி காலதாமதமாக வழங்கப்படுவதால் மாணவா்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா்.
கடந்த மூன்று ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கல்வி உதவித் தொகையைப் போராடி பெற வேண்டிய சூழ்நிலையில் தான் சம்பந்தப்பட்ட துறை உள்ளது. தலைமைச் செயலா், துறை செயலா்கள் மாணவா்கள் மீது அக்கறை காட்டாமல் அலட்சியப் போக்குடன் செயல்படுவதே இந்த காலதாமதத்திற்கு காரணம் என உணா்கிறோம்.
இதற்கு மேலும் காலதாமதம் செய்தால் பாதிக்கப்பட்ட மாணவா்களை ஒன்று திரட்டி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை செய்கிறோம் என தெரிவித்துள்ளனா்.