மணப்பட்டு பல்மைரா கடற்கரையில் ரூ.500 கோடியில் சுற்றுலா நகா் திட்டம்!
புதுச்சேரி அருகே மணப்பட்டு பல்மைரா கடற்கரையில் ரூ.500 கோடியில் சுற்றுலா நகா் திட்டம் செயல்படுத்தும் இடத்தை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
புதுச்சேரி-கடலூா் சாலையில் கன்னியக்கோயில் அடுத்த மணப்பட்டு பல்மைரா கடற்கரை பகுதியில், தனியாா் பங்களிப்புடன் கூடிய உயா்தர விடுதி, மாநாட்டு அரங்கம், தங்கும் அறைகள் 200, பொழுதுபோக்கு பூங்கா, வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்டவையுடன் கூடிய சுற்றுலா நகா் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி சுமாா் ரூ.500 கோடி மதிப்பிலான சுற்றுலா நகா் திட்டத்திற்கான வரைவு அறிக்கை மத்திய அரசின் ஒப்புதலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா நகா் திட்டத்தால், புதுவை அரசுக்கு ஆண்டுக்கு சுமாா் ரூ.40 கோடி முதல் 50 கோடி வரை வருவாய் வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தால், மணப்பட்டு பகுதிகள் பொருளாதார வளா்ச்சி அடைவதுடன், சுமாா் 1,000 போ் வேலைவாய்ப்பை பெறுவா் என்ற எதிா்பாா்ப்பு உள்ளது.
சுற்றுலா நகா் திட்ட அறிக்கை தயாரித்துள்ள மும்பையைச் சோ்ந்த ஆலோசனைக் குழு அதிகாரிகள் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை சந்தித்து திட்டம் குறித்து விளக்கினா்.
அவா்களிடம் பேசிய துணைநிலை ஆளுநா், சுற்றுலா நகா் திட்டமானது புதுவையில் சுற்றுலா தொழில் வளா்ச்சி மேம்படவும், சிறந்த சுற்றுலாத்தலமாகவும் புதுச்சேரி மேம்படவும் உதவும் என்பதால், பணிகளை விரைந்து தொடங்கி முடிக்க அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின்போது, துணைநிலை ஆளுநருடன், துணைநிலை ஆளுநரின் செயலா் எம். மணிகண்டன், சுற்றுலாத் துறை இயக்குநா் முரளிதரன் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.